இரண்டு மெளனிக, ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு

 

வாழ்த்துரை

 

ஏடு எடுத்து

கவி படித்தார்…

நாடு நிலைமையை

கவி வடித்தார்.

என இந்நூல் வாயிலாக ஜி.இரகுபதி சந்திரசேகர் என்னும் விகனைப் பார்க்கிறேன்.

கவிஞர் விகன் அவர்களின் கவிதைக்கான மொழி எளிமையானது. பிசிறுகள் அற்றது. அவரின் கவிகள் வாசகனுக்கும் அனுபவத் தொற்றலை ஏற்படுத்தி அவனையும் கவிதையுடன் ஒன்றிறுக்கச் செய்கிறது. இவரது உணர்வும் உள்ளடக்கமும் வடிவமும் இணைந்து கவிதையாக மிளிர்கிறது. இவரது கவிதைகளில் பல்வேறு விதமான மனிதர்கள் வந்து போகிறார்கள். இயற்கைக்காட்சிகள், சோகங்கள் படிமங்களாகப் பதிவு பெறுகின்றன.





கவிதையைப் படைக்கச் சொற்களால் வரம் பெற்றவர்கள் ஒரு சிலர்தான். அந்தச் சிலரில் கவிஞர் விகன் அவர்களும் ஒருவராகத் திகழ்கிறார். சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் பதிவு செய்யப்பட வேண்டிய பிரதிகள் பலவற்றை மனதில் சுமந்து கொண்டேதான் வாழ்ந்து வருகிறான். ஆனால் பலருக்கு அதனை அச்சில் கொண்டு வரும் வாய்ப்பும் சூழலும் அமைவதில்லை. இன்றைய கணிப்பொறி அச்சு முறையின் வருகை எல்லோருக்கும் நூல் எழுதும், அச்சிடும், வெளியிடும் பணிகளை எளிமைப் படுத்தியிருக்கிறது.

இரண்டு’ என்னும் இக்கவிதை நூல் மெளனிக, ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாக உள்ளது. கவிதைகளுக்கான தலைப்புகள் இரண்டெழுத்துகளைக் கொண்டதால் இந்நூலின் தலைப்பு இரண்டு என வைத்திருப்பது சிறப்பாக உள்ளது. இரு என்று தலைப்பு வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மாற்ற மில்லை மாறுவது மில்லை புதிரில்

செயற்கை இல்லை இரவல் இல்லை எதிரில்

உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பர். சில நியதிகள் மாறாதவைகளாக இருக்கின்றன. பசி என்றும் மானிடர்களிடம் இருந்து வருவதை புதிர் என்கிறார் கவிஞர்.

கதை சாவு எழுத்தாளன்

விதை சாவு விவசாயி

சாவு என்னும் தலைப்பில் எழுதியுள்ள கவிதையில் எழுத்தாளனின் நிலையையும் விவசாயியின் நிலையினையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.

காதல் தந்த புதையல்

காலம் தந்த குரல் கலைஞன்

காதல் தொடங்கி கலைஞனில் முடியும் கலை தலைப்பிலான கவிதைக்கு நம்பிக்கையும், குறளோவியமும் கலையாக அமைத்துள்ளார்.

பொறி, நீர், ஈகை, வாதீ என்னும் தலைப்பிலான கவிதைகளில் பெரியார், அண்ணா, வள்ளலார், பாரதியார் முதலிய சான்றோர்களைக் கவிதைக்குக் சான்றாக்கிக் காட்டுகிறார் கவிஞர்.

தம்பியின்றி அண்ணா உண்டோ?

விதையின்றி பயிர் உண்டோ?

வளியோரைக் காத்திட

எழுச்சி வேண்டும்

மனிதம் மீட்டிட

மீண்டும் நீ வேண்டும்

எல்லைச் சாமிக்கு எது சாத்திரநீதி

கொல்லைச் சாமிக்கு ஏது சமூகநீதி

இது சனாதனம்

உளறல் விதி சினிமா

பிளறல் சதி அரசியல்

கிளறல் கிலி ரெய்டு

ஆகிய கவிதைகளில் சமூக நிலைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

ஆசைக்கு சுடு கால் பேராசை

கட்சிக்கு இரு கால் பதவிஆசை

வாழ்வதற்கு ஏது ஓசை?

என்ற கவிதை அடித்தட்டு மக்களின் குரலாகப் பிரதி பலிக்கிறது.

இவ்வாறு நூல் முழுக்க கவிதைகள் சிறப்பாக அமைகின்றன.

வாழ்நாளில் ஒரு முறையேனும் கவிதையை உணராதவர்கள் யாருமே இல்லை. எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாத கவிதைகளைச் சுமந்து கொண்டு வாழ்கிறவர்கள் இங்கு அதிகம். இசையைக் கொண்டாடுவதும், அழகிய சிறு சொற்றொடர்களைச் செவியுறும் போது, அதைக் கொண்டாடித் தீர்ப்பதும் அதனாலேயே நிகழ்கிறது.

கவிஞர் விகனின் கவிதைகள் சிறிய சம்பவங்களின் கோவை போல பல தருணங்களில் அமைந்திருக்கிறது. இதனால், இதை வாசிக்கும் பலருக்கு அவை தமது வாழ்வின் பிரதி பலிப்புகள் போலவும் தோன்றலாம். இந்தக் கவிதைத் தொகுப்பு நெடுகிலும் வலிகளும், குதூகலமும், மகிழ்வும், துயரமும் காதலாகவும், நட்பாகவும், எதிர்ப் பாகவும் விடுதலைக்கு ஏங்கும் மனத்தோடு சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறது.

53 மெளனிக கவிதைகளும், 109 ஹைக்கூ கவிதைகளும் கொண்ட, இக்கவிதைத் தொகுப்பில் எந்தப் பக்கம் பார்த்தாலும் எண்ணத்தை இழுத்து நிறுத்தும் கவிதைகள் நிறைந்து கிடக்கின்றன.  விகனின்‘ மனிதம் தேடும் பார்வை’ கவிதைகள் முழுக்க நிறைந்து கிடப்பதை இந்தக் கவிதைகள் எடுத்துரைக்கின்றன.

இந்நூல் வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைத்திருக்கும் நூலாசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்...... வாழ்த்துகள்.

 

பொன்னேரி- 601204                                                              மகிழ்வுடன்

18.11.2022                                                                              முனைவர்கி. அய்யப்பன்

                                                                                                தமிழ்ப் பேராசிரியர்

                                                                                                உ. நா. அரசினர் கல்லூரி

                                                                                                பொன்னேரி- 601204

                                                                                                பேசி:9962660279

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்