கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்
அணிந்துரை
முனைவர் கி. அய்யப்பன்
தமிழ்த் துறை,
உ. நா. அரசினர் கல்லூரி,
பொன்னேரி- 601204
கைப்பேசி: 9962660279
இந்த
மண்ணில் எழுதப்படுகிற, படைக்கப்படுகிற அல்லது உருவாகப்படுகிற எல்லா கலை இலக்கிய, கலாச்சார
மேன்மைகளுக்கும் மக்கள்தாம் அதிபதிகள். அவர்களுக்குப் போய்ச் சேராத எதுவும், அது எத்தகைய
உன்னதமானவர்களால் சிருஷ்டிக்கப் பட்டிருந்தாலும் கூட அவை யாவும் காலத்தின் முன்பாக
வெறும் குப்பையாகிவிடும். மக்களை நிராகரித்துவிட்டு எந்த ஒன்றும் இங்கே நிலைத்து நிற்க
முடியாது. அத்தகைய மக்களுக்கான கவிதையை கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர் தொடர்ந்து
படைத்துவருகிறார்.
ஆஸ்திரேலியாவில்
சிட்னியில் வசிக்கும் கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர் அவர்கள், இதற்கு முன் இரண்டு, துடித்திடு துளிர்விடு
என்னும் இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார். இது போதும் என்று அத்தோடு நில்லாமல், தமிழின் மீது கொண்டுள்ள காதலினாலும் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கரையாலும் தொடர்ந்து
கவிதை எழுதி வருகிறார். அவர் தொடர்ந்து எழுதிய கவிதைகளைத் தொகுத்து கன்னத்தில்
குழி- ஓர் அழகிய மொழி என்னும் பெயரில் நூலாக வெளிவருவது பெரும் மகிழ்வைத் தருகிறது.
இக்கவிதை
நூலின் முதல் கவிதையான கன்னத்தில் குழி- ஓர்
அழகியல் மொழி என்னும் கவிதையின் தலைப்பே நூலின்
தலைப்பாகவும் அமைந்துள்ளது. என் அம்மா என்னும் கவிதையில்,
தன்
உயிர் காலம்
தான்
வாழும் மட்டும்
பகிர்ந்தே
மகிழ்ந்திடும்
தெய்வத்தின்
படைப்பு
‘அம்மா’ என் அம்மா
என்று அம்மாவின்
சிறப்பையும் அன்பையும் திறம்பட எடுத்துரைக்கிறார். நம்பு துணை என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் கருப்பண்ணசாமி குறித்தும்,
தமிழ்க் கோதாய் எனும் கவிதையில் ஆண்டாள்
குறித்தும் பேசும் கவிஞர், அறியகம்
என்னும் கவிதையில்,
கோயிலே
பக்தி
எனும்
புழக்கத்தில்!
அறிவியலே
‘சக்தி’
எனும்
விளக்கத்தில்
என்று மனிதனுக்கு
பக்தி என்னும் புழக்கத்தில் அறிவியலே சக்தி என்று கவிஞர் எடுத்தியம்புகிறார்.
சாய்ந்தாடும் காதல் என்னும் கவிதையில்
காதலைக் குறித்து,
காதல்
சாமரம் வீசியே! உன் கையில்
அமர்ந்திட
உமர்ந்திட தாகமாய்
நீட்டி
நனைக்கிறது இருவருக்குள்!
என்று காதலைப் பற்றி எழுதி இருக்கிறார். எல்லைக் காப்பு என்னும் கவிதையில்,
அண்டக
நாட்டுக்குள்
சடுகுடு
விளையாட்டு
வானத்தின்
மீதில்
பொழியும்
குண்டுகள்
இரக்கமின்றி
பலிகள்
தயக்கமின்றி துப்பாக்கிகள்
இயக்கமின்றி
உயிர்கள்
நிலையாமை
நிலையான்மை
என்று எல்லை பாதுகாப்பில்
உயிர்களின் பலி குறித்து பேசி நிலையாமையை எடுத்துக் கூறுகிறார். நீரகம் என்னும் கவிதையில்,
காசாகும்
மாசான தண்ணீரே
நதி
நீ! நிதி காணும்
தடம்
மாறி பாட்டிலில் அடைய!
குடம்
ஏந்திப் பெண்கள் அலைய!
கருப்பாகி
! வெறுப்பாகி!!
அழுகின்றாய்
தூய நீரே!!!
புதுக்
கோளை தேடவா
என்று நீரின் மாசு குறித்தும் தண்ணீர் பஞ்சம் குறித்தும்
குறிப்பிடும் கவிஞர், பூமியில் நீரை மாசாக்கி
விட்டோம் என்று வருந்துகிறார். மேலும் கவிஞர், நீரே உனக்கு புது கிரகத்தைத் தேடவா என்று கேட்கிறார்.
கேள்வி எனும் பெரியார் என்னும்
தலைப்பில் அமைந்த கவிதையில்,
அருள்
இருள் வேள்வி தனை வென்றே
திராவிடத்
தமிழ்த் திருநாட்டில்
கருப்பில்
பிறந்த சிகப்பாய்
என்று பெரியாரைப் பற்றி எழுதுகின்றார் கவிஞர். மேலும் சமநீதி என்னும் கவிதையில்,
தீண்டாமை
இருக்கு
பெருக்கு
அண்டாமை
என்றே
என்று தீண்டாமைமைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் கவிஞர்.
காஞ்சிப் பகலவன் என்னும் கவிதையில்,
கழகக்
குரல்- நீ
என ஒரு
விரல் நீட்டியே!
திராவிடத்தின்
சின்னமாய்
வங்கக் கடலின் மன்னனாய்
தம்பியுடன்
உறங்குகின்றாய்! தினம் எழும்
‘உதய
சூரியனாய்’
என்று அண்ணாவை பற்றியும் எழுதுகின்றார்.
வாழ்க்கை,
ஆன்மீகம், சமத்துவம், சமூகம், அறிவியல் முதலிய
பொருண்மைகளில் எழுதியுள்ள இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும், நம்மை சிந்திக்கத்
தூண்டுவன. இவர் ஒரு புதிய சொல்லாட்சிகளைக் கொண்டு கவிதை எழுதிள்ளார். கவிஞரின் இத்தகைய முயற்சியை மனதார பாராட்டுகிறேன்.
மனிதநேயத்தை
உள்ளடக்கிய அனைத்துக் கொள்கைகளின் சாயலும் கவிஞரிடம் உள்ளது. கொள்கைகளில் குறுகிய வேறுபாடுகளைக்
கடந்து, அகண்ட பார்வையில் மக்களை விழுங்கும் மனிதநேய மிக்கவர் கவிஞர் முனைவர் இரகுபதி
சந்திரசேகர் என்பதை இந்நூலில் உள்ள கவிதைகள் நமக்கு உறுதிப்படுத்துவது மட்டுமல்ல, அது
உண்மையும் கூட. ஏன் எனில் பார்வையற்ற, மாற்றுப்பாலின
மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
மேலும், பல நிலையிலும் சமூகத் தொண்டும் செய்து வருகிறார்.
தமிழ்
மொழியின் மீது பற்றும் சமூகத்தின் மீது அக்கரையும்
கொண்டு கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி என்னும்
கவிதை நூலை தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ள ஆஸ்திரேலியா வாழ் கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர் அவர்களைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து தமிழுலகில் இயங்கி தமிழ் மொழி, இன, சமூக
முன்னேற்ற சிந்தனைகள் கொண்ட கவிதை நூல்களை படைத்திட வேண்டுகிறேன்.
இடம்: பொன்னேரி அன்புடன்
நாள்: 08.11.2024 (கி. அய்யப்பன்)
கருத்துகள்
கருத்துரையிடுக